×

தமிழக காவல் துறையில் கொரோனாவுக்கு முதல் பலி சென்னை இன்ஸ்பெக்டர் பாலமுரளி உயிரிழப்பு

சென்னை: தமிழகம் காவல் துறையில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்று வந்த சென்னை மாம்பலம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி நேற்று உயிரிழந்தார்.  இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் அச்சத்தை எற்படுத்தியுள்ளது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 55 வயதுக்கு மேல் உள்ள போலீசார் டிஜிபி உத்தரவுப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர்.  அதேபோல் சென்னை மாநகர காவல் துறையில் 55 வயதுக்கு மேல் உள்ள போலீசார் அனைவரையும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலமுரளி(47) கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு வடபழனியில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நோய் தாக்கம் தீவிரமாக இருந்ததால் உடனே ஓமந்தூரார் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அப்போது அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் சென்றதால் உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சி திணறல் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இன்ஸ்பெக்டரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ₹75 ஆயிரம் மதிப்புள்ள கொரோனா தடுப்பு மருந்தை தனது சொந்த செலவில் மூன்று தடுப்பு மருந்துகள் ₹2.25 லட்சத்திற்கு வாங்கி கொடுத்தார். அந்த தடுப்பு மருந்தை செலுத்திய பிறகும் இன்ஸ்பெக்டர் பாலமுரளி உடல் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளி நேற்று உயிரிழந்தார். வேலூரை சேர்ந்த பாலமுரளி பொறியியல் பட்டதாரி. இவரது மனைவி பெயர் கவிதா, மகள் ஹர்ஷவர்தனி, மகன் நிஷாந்த். கடந்த 2000ம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து, பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றினர். பிறகு மாநகர காவல் துறையில் கே.ேக.நகர் இன்ஸ்பெக்டராகவும், இறுதியாக மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பணியாற்றி வந்தார்.
இன்ஸ்ெபக்டர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் போலீசாரிடையே பெரும்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்பெக்டர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாவட்டம், மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாலமுரளி  உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். கொரோனா வைரஸ் தொற்று நோய் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாலமுரளி குடும்பத்தில்  ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : coroner ,Madras Inspector Balamurali ,Inspector ,Tamil Nadu ,Coroner Kills First , Coroner kills, first Tamil Nadu, inspector
× RELATED முதியவர் கொலை வழக்கு: ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்